தனக்கிருக்கும் இந்துத் தீவிரவாத பிம்பத்தை மறைத்துக் கொள்ள அத்வானி எடுத்திருக்கும் திட்டமிட்ட முயற்சிதான் அவரது சுயசரிதை என்று யாராவது கூறினால், அவர்கள் அந்த 986 பக்க நூலை படிக்கவில்லை என்று பொருள்.
பாபர் மசூதி இடிப்பு இந்துத்துவ எழுச்சியின் வடிவம் என்பதிலும், ராமர் கோவிலுக்கான ரத யாத்திரைதான் தனது அரசியல் வாழ்வில் மாபெரும் திருப்பத்தைக் கொணர்ந்த நிகழ்ச்சி என்பதிலும் அத்வானி உறுதியாக இருக்கிறார்.
தனது வாழ்வின் மிகத் துயரமான நாள் என்று 1992 டிசம்பர் 6ஆம் நாளைக் குறிப்பிடும் அத்வானி, இதுநாள் வரை இடிக்கப்பட்ட மசூதியை எந்த இந்திய அரசியல்வாதியும் கட்டித்தர வாக்களிக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறார்.
அதேபோல நரேந்திரமோடி மீது அவதூறு தூவி, அவர் பலியாக்கப்பட்டதாக இரக்கம் கொள்ளும் அத்வானி, இஸ்லாமியர்கள் மீதான அரசு ஆதரவோடு நடைபெற்ற திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தை வசதியாக மறப்பதோடு, அந்த இனப்படுகொலைக்கான அனைத்து குற்றச் சாட்டுகளிலிருந்தும் மோடியை விடுவிக்கிறார்.
இதில் எந்த ஆச்சிரியமும் இல்லை, ஏன் என்றால் இவர் தனது 21-ஆவது வயதில் கற்றுக்-கொண்ட மதச்சார்பின்மையின் முதல் பாடம், "எல்லா இஸ்லாமியர்களும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்லை."இந்த நூலைப் பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்பவர் தனது கருத்தையும், நினைவுகளையும் கொஞ்ச நேரம் மூட்டை கட்டி வைத்துவிட்டு,
இது ஓட்டுப் பெட்டியைக் கவர்வதற்கான திட்டத்தோடு எழுதப்பட்ட நூல் என்று தன்னை சமாதானம் செய்து கொள்ளத் தயாரானவராயிருக்க வேண்டும்.
இந்நூலில் சோனியா காந்தி அந்நிய நாட்டுக்காரர் என்று உணர்ச்சிமயமான விசயத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறார்;
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறார்;
கார்கில் போர் பற்றியும் இந்தியாவின் அணு ஆயுதத் தயாரிப்புப் பற்றியும் பெருமையில் பூரித்துப் போகிறார்.
இந்தியா ஒளிர்கிறது விளம்பரங்கள் சுவையற்றதாகிப் போனது பற்றியும், ஜின்னாவின் மதச்சார்பின்மை குறித்த தனது நற்சான்று பற்றியும் கூறுகையில் உறுதியாக இருக்கிறார்.
நெருக்கடி கால கட்டம் உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்தான் அத்வானி. அதனால் காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும் தவறான வெளியுறவுக் கொள்கையையும் சாடும்-பொழுது அது நேர்மையாக இருக்கிறது.
இந்த நேர்மைதலித் வாக்கு வங்கி மீது அத்வானி கண் வைத்திருப்பதால், இந்துத்துவத்தை சல்லடையால் சலித்துப் பிரித்தெடுத்து "இந்துத்துவத்தின் புதிர்கள்" (Riddles of Hinduism) எழுதிய எழுச்சிகரமான தலைவர் டாக்டர் அம்பேத்கரை சங்பரிவாரின் அடையாளங்களுள் அடக்கிப் போட்டு,
தங்கள் சார்பானவராகக் காட்டிக் கொள்ளும் இந்துத்துவ முயற்சி இந்நூலில் அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே, அம்பேத்கரின் பிரிவினைக்கு எதிரான ஒரு கருத்து,
அவர் வர்ணித்த கஜினியின் சோமநாதர் கோயில் மீதான படையெடுப்பு இவற்றை எல்லாம் எடுத்தாளுகிறார்.
மேலும் இந்தியாவின் கலாச்சாரத்தை விட்டு விலகிப் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் மதம் மாறியபோது கூட அவர் இஸ்லாமுக்கோ கிறிஸ்துவத்துக்கோ மாறவில்லை என்று வசதியாக வரலாற்றைத் தன்பக்கம் திருப்புகிறார்.
இந்த சுயசரிதை (அந்நியன் படத்து விக்ரம் போல) தனக்குள் ஒரு பன்முக மனக் கோளாறைக் (Multi personality disorder) கொண்டிருக்கிறது.
அடிக்கடி முக்கியமானவர்களின் பெயர்ப் பட்டியலை மூச்சிறைக்கச் சொல்கிறது.
சில சமயங்களில் இந்நூல் வரப்போகும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை போன்று இருக்கின்றது.
பிரதமர் பதவியை அடைய மக்களின் ஆணைக்காகக் காத்திருக்கும் ஒருவரது சுயசரிதையின் முடிவுரை, தேசத்திற்கான தனது நோக்கு என்ன என்பதை எடுத்தியம்பத் தவறுகிறது.
எதிர்காலத்திற்கான திசையை அரவிந்தரிடமிருந்தும் விவேகானந்தரிடமிருந்தும் தேடும் ஒரு 80 வயது முதியவரின் சித்திரத்தையே இந்நூல் வரைந்து காட்டுகிறது.
மிகத் தாளராமான வார்த்தைகளாலும், மிகக் குறைவான உண்மைத் தகவல்களாலும் நெய்யப்பட்டுள்ள இந்நூலைப் படியுங்கள்.
அப்படியே இதிலுள்ள செய்திகளை மறுத்துரைக்கும் வாதங்கள் வெளிவரும் செய்தித்தாள்களையும் படிக்கத் தவறாதீர்கள்.
அப்போதுதான் காஷ்மீரின் தன்னாட்சியை தனது அதிகாரத்துக்காக விலை பேசியதாக உள்ள செய்தியை டாக்டர் பரூக் அப்துல்லா மறுத்திருப்பதையும், அய்.சி.814 விமானக் கடத்திலின்போது,
ஹார்வர்டில் இருந்த தன்னை அழைத்ததாக அத்வானி கூறுவது அபத்தம் என்று ராபர்ட் பிளாக்வில் மறுத்திருப்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளமுடியும்.
1தகவல் பிழைகளும் இதில் இல்லாமல் இல்லை. உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் அமிர்தசரஸைச் சார்ந்த பொதுவுடமை இயக்கத் தலைவர் சத்யபால் டங்கை மறைந்த சத்யபால்டங் என்று எழுதி இந்நூலில் சாகடித்து விட்டார்.
சாண்டர்ஸ் கொலை வழக்கில் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் இந்நூல் டெல்லி பாராளுமன்றத்தில் குண்டு வீசயதற்காகத்தான் அவர்கள் தண்டனை பெற்றதாகக் கூறுகிறது.
சோர்வளிக்கும் கதை சொல்லல், இந்த அரசியல் தன் வரலாற்று நூலை வெறுமையானதாக்கிறது. ஆகக் கடைசியில் இந்த இரும்பு மனிதனின் உருவம் துருப்பிடித்துக் காணாமல் போகிறது.
(குறிப்பு: *1 - ராபர்ட் பிளாக் வில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர். இவர் இந்தியாவில் பணியில் இல்லாத காலத்தில் தான் கந்தஹார் விமானக் கடத்தல் நடைபெற்றது. ஆனால் அத்வானி தனது நூலில் பிளாக்வில்லை அழைத்துப் பேசியதாகக் கூறியிருக்கிறார். இது தவறான தகவல் என்றும் அந்த நேரத்தில் தான் ஹார்வடில் இருந்ததாகவும், இந்தியாவில் இரந்தவர் ரிச்சர்ட் செலஸ்டி என்பவரே என்றும் பிளாக்வில் மறத்திருக்கிறார்.)